Latest

10/recent/ticker-posts

செப்டம்பர் 5, என்றென்றும் வழிகாட்டும் பொன்மலைத் தியாகிகள்💪

AIBDPA TN* 

என்றென்றும் வழிகாட்டும் பொன்மலைத் தியாகிகள்💪*


             1946 ஆம் ஆண்டானது வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை நாடு கண்ட ஆண்டாகும். வங்காளத்தில் தேபாகா இயக்கம், திருவாங்கூரின் புன்னப்புரா – வயலார் எழுச்சி, தெலுங்கானாவில் ஆயுதமேந்திய போராட்டம், மகாராஷ்டிராவின் வொர்லி ஆதிவாசி எழுச்சி மற்றும் மாபெரும் கப்பற்படை எழுச்சி போன்ற அலைகள் நாடு முழுவதிலும் எதிரொலித்தன. இந்த எழுச்சி ரயில்வே தொழிலாளர்கள் மத்தியிலும் பிரதிபலித்தது. 1946 மே மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்த வாக்கெடுப்பு பெரும் ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

தொழிலாளர் ஒற்றுமையும் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையும்

            தொழிலாளர் ஒற்றுமையைக் கண்டு அஞ்சிய தென்னிந்திய ரயில்வே நிர்வாகம், விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்தது. வேலை நிறுத்த வாக்கெடுப்பில் தீவிரமாகப் பங்கெடுத்த பொன்மலை, விருத்தாச்சலம், தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்த முன்னணித் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது. 9 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, ஜூலை 22 அன்று பொன்மலை பெயிண்டிங் பிரிவின் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்தல், முறையான விசாரணை வழிகாட்டுதல்களை வகுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். தொழிற்சங்கத் தலைவர்களான எம். கல்யாணசுந்தரமும், அனந்தன் நம்பியாரும் தென்னிந்திய ரயில்வே பொதுமேலாளர் எப்.சி. ரெனால்ட்ஸை சந்தித்துப் பேசியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து, ஆகஸ்ட் 24 முதல் பொது வேலைநிறுத்தம் செய்வது   என சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு முடிவு செய்தது. பெயிண்ட் பிரிவில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்தல், போதுமான பஞ்சப்படி, மலிவுவிலைக் கடைகள், ஊதிய அமைப்பு மாற்றம், ஆட்குறைப்பு நிறுத்தம், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல், வேலைப்பளுவைக் குறைத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பொது வேலைநிறுத்தமும் அரசின் அடக்குமுறையும்

        இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும், தொழிலாளர்கள் ஆங்கிலேய ரயில்வே நிர்வாகத்துடன் ஒரு பெரும் மோதலுக்குத் தயாரானார்கள். இந்தப் போராட்டம் ஆங்கிலேய நிர்வாகத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டமே தவிர, புதிதாக அமைந்துள்ள இடைக்கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்று சங்கத் தலைவர்கள் மாகாண காங்கிரஸ் அமைச்சரவைக்குத் தெரிவித்தனர். ஆனால், இடைக்கால அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர்களோ இதைத் தங்களுக்கெதிரானதென்று கருதி ஒடுக்குமுறைகளில் இறங்கினர்.

          திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட 430 ரயில் நிலையங்களில் 300 நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளரும் குடும்பத்தினரும் அமைதியாக மறியல் செய்தனர். தொழிலாளர்களை விலைக்கு வாங்கும் நிர்வாகத்தின் அத்தனை முயற்சிகளும் துச்சமாகத் தள்ளப்பட்டன.

பொன்மலை துப்பாக்கிச்சூடும் ஐந்து தியாகிகளின் பலியும்

            1946 செப்டம்பர் 2 அன்று ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவை தில்லியில் பதவியேற்றது. இந்த நிகழ்வு நடந்து சரியாக 71 மணி நேரத்திற்குப் பின் பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கியது. செப்டம்பர் 5 அன்று காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத்திடலில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து தலைவர்களின் உரைகளைக்  கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அங்கு நுழைந்த பெரும் போலீஸ் படை, எந்தவித முன்னறிவிப்புமின்றி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. மலபார் சிறப்புக்காவல்படை மிருகத்தனமான தடியடி தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 26 வயது தங்கவேலு, 28 வயது தியாகராசன், 26 வயது ராஜூ, 25 வயது ராமச்சந்திரன், 24 வயது கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து இளம் தோழர்கள் அதே இடத்தில் பலியானார்கள். சங்கக் கட்டிடத்திற்குள் நுழைந்த போலீஸ் படை, பொதுச்செயலாளர் அனந்தன் நம்பியாரின் கைகால்களைக் கட்டி தடியால் தாக்கி குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது. 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்ததுடன், நம்பியாரின் வயது முதிர்ந்த தாயின் வலது கையும் முறிக்கப்பட்டது. 273 தொழிலாளர்கள் மீது சதிவழக்கு போடப்பட்டு, பொன்மலை காலனியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

வரலாற்றில் நிலைத்த வெற்றியும் தியாகமும்

              இதனைத் தொடர்ந்து அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனத் தலைவர் எஸ்.குருசாமி திருச்சிக்கு விரைந்து வந்து நிர்வாகத்தை வற்புறுத்தினார். தொழிலாளர்களின் போராட்டக் குணம் குறையாததைக் கண்ட நிர்வாகம், எஸ்.குருசாமி மூலம் சில வாக்குறுதிகளை அளித்தது. தண்டனை வழங்கும் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் உரிமையாயிற்று. முதல் ஊதியக்குழு மூலம் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன, அகவிலைப்படி உயர்த்தப்பட்டது, பல பிரிவினருக்கும் 8 மணி நேர வேலை உறுதியானது. 273 பேர் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. பொன்மலை தியாகிகள் ஐவரும், அவர்களின் சகத்தோழர்களும் சிந்திய ரத்தத்தில் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது.

இன்று (செப்டம்பர் 5) பொன்மலைத் தியாகிகள் தினம்

Post a Comment

0 Comments