Latest

10/recent/ticker-posts

ஓய்வூதியர் வரலாற்றில் மைல்கல்லாக -27.02.2026ல் - சென்னையில் சிறப்பு மாநாடு...*

 ஓய்வூதியர் வரலாற்றில் மைல்கல்லாக -27.02.2026ல் - சென்னையில் சிறப்பு மாநாடு...!!







             மத்திய அரசின் பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பான FCPAவின் ஏற்பாட்டின் படி, சென்னையில் 27.2.26 அன்று நடைபெற்ற சிறப்பு மாநாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி கண்டது.

    ஆயிரத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் பல மாவட்டங்களிலிருந்து உற்சாகமாகக் கலந்து கொண்டனர். அஞ்சல் & RMS, BSNL, ரயில்வே, கணக்காய்வு & தணிக்கை, வருமானவரி, மத்திய வரி மற்றும்  GST உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் பெருமளவில் பங்கேற்றனர். 

           நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தோழர்கள் திரண்டு வந்தனர். குறிப்பாக கோயம்புத்தூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் பெண் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்றது சிறப்பாக பாராட்டப்பட்டது.

                    மாநாட்டின் துவக்கத்தில், 101 வயதில் மறைந்த, விடுதலைப் போராட்ட வீரர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் அனைவராலும் போற்றி மதிக்கப்பட்ட போராளித் தலைவர், தகைசால் தமிழர் தோழர் R.நல்லக்கண்ணு அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டிற்கு FCPA மாநிலத் தலைவர் தோழர் டி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தோழர் ஆர். ராஜசேகர், FCPA மாநில ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தும் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

1) பென்ஷன் வேலிடேஷன் சட்டம், 2025 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

2) 8வது மத்திய ஊதியக்குழுவின் வரையறைச் சாசனத்தில் (Terms of Reference) ஓய்வூதியத் திருத்தத்தைச் சேர்க்க வேண்டும்.

3) பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களை “நிதியில்லா சுமை” என குறிப்பிடும் ஓய்வூதியர் விரோதக் கருத்துகளைத் திரும்ப பெற வேண்டும்.

4) BSNL ஓய்வூதியர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இந்தத் தீர்மானங்களை AIBSNLPWA தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் எஸ். சுந்தரகிருஷ்ணன் முன்மோழிந்தார்.

            FCPA வின் அழைப்பை ஏற்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் டி. ரவிக்குமார் அவர்களும், CPI(M) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஏ. அறுமுக நயினார் அவர்களும், திமுக தலைமை நிலையச் செயலர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும், தோழர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், தேசிய கவுன்சில் உறுப்பினர் CPI கட்சி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்,  ஓய்வூதியர்களின் நியாயமான போராட்டத்திற்கு தங்களது கட்சிகளின் முழு ஆதரவை உறுதியளித்தனர்.

              மேலும் பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் அகில இந்திய, மற்றும் மாநிலத் தலைவர்களான, தோழர் டி. கோபாலகிருஷ்ணன், அகில இந்தியத் தலைவர், AIBSNLPWA, தோழர் பி. மோகன், மாநிலச் செயலாளர், AIPRPA, தோழர் ஆர். ராஜன், உதவிப் பொதுச் செயலாளர், SNPWA, தோழர் கே. கோவிந்தராஜ், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர், AIBDPA ஆகிய தோழர்கள் உரையாற்றினர்.

FCPA வின் மாநிலப் பொருளாளர் தோழர் சி. ஒளி இறுதியில் நன்றி தெரிவித்தார்.

மாநாடு தொடங்கிய போதும்  நிறைவடையும்  போதும் கோரிக்கை முழக்கங்கள் அரங்கம் முழுவதும் ஒலித்தன. ஓய்வூதியர்களின் ஒன்றுபட்ட உறுதியையும், உரிமைக்கான போராட்ட மனப்பாங்கையும் இந்த மாநாடு வலிமையாக வெளிப்படுத்தியது. இந்த ஒற்றுமை இன்னும் ஓங்க வேண்டும்,  ஓய்வூதியர் கோரிக்கைகள் வெல்ல வேண்டும்,  என FCPA தமிழ் மாநிலம் விழைகிறது. 

தோழமையுள்ள 
D.பாலசுப்பிரமணியன், தலைவர் FCPA,
ஆர். ராஜசேகர் 
ஒருங்கிணைப்பாளர் FCPA,
C.ஒளி 
பொருளாளர்
FCPA, தமிழ்நாடு
27.2.26

Post a Comment

0 Comments