அக்டோபர் 1 – உலக மூத்தோர் தினம் - அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டாடுவோம் !
September 18, 2021
அக்டோபர் 1 – உலக மூத்தோர் தினம் – அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டாடுவோம் !
அக்டோபர் 1 – உலகம் முழுதும் ஆர்ப்பாட்டம் !
தோழர்களே !
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முடிவான அக்டோபர் 1-ம் தேதியை ”ஓய்வூதியர் தினமாக” அனுசரிப்பதை இந்த ஆண்டும் நம் உலக தொழிற்சங்க சம்மேளத்தின் (WFTU) அங்கமான சர்வதேச தொழிற்சங்கம் (ஓய்வூதியர் & பணிஓய்வு பெற்றோர்) (TUI P&R) அமைப்பின் அறைகூவலின் படி நாம் மிக சக்தியாக தமிழகத்தில் அமல்படுத்துவது நமது கடமை. சென்ற ஆண்டு இந்த அறைகூவல் உலகம் முழுதும் பாதிப்பினை ஏற்படுத்திய கொரொனா பெருந்தொற்றால் பெரிய அளவு பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் முழுமையாக நாம் வெளிவரவில்லை. என்றாலும், அனைத்து விதிமுறைகளையும் அமலாக்கிக் கொண்டே அக்டோபர் முதல் நாள் முடிந்த வடிவத்தில்உலக வயதானோர் நாளை அனுசரிப்பதும் நம் கடமை.
கொரோனா பெருந் தொற்று உருவாக்கிய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அரசுகள் பல வகையிலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது கடும் தாக்குதல்களைத் தான் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஊதிய வெட்டு, அநியாயமான லே-ஆஃப், சிறு தொழில்கள் கடும் பாதிப்பு போன்றவற்றால் தொழிலாளி வர்க்கம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எந்த பாதிப்பு உருவாக்கப்பட்டாலும் கொரோனாவின் மீது பழிபோட்டு மக்களைக் கடுமையாகத் தாக்குவதை அரசுகள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.
வயதானோர் மற்றும் ஓய்வூதியர்களைப் பொறுத்த மட்டில் பெரும்பாலான பிரச்சனைகள் கொரோனா தொற்றுக்கு முன்பிருந்தே நீடித்து வருகின்றன. வீடுகளில் நாம் துன்புறுத்தப்படுதல்; போதுமான மருத்துவ வசதியின்மை; பற்றாக்குறை பென்ஷன்; பெரும்பாலான வயதானோருக்கு எந்த பென்ஷனும் இல்லாத நிலை; பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்கள் பொறுப்பேற்றுள்ள தனியார் நிறுவனங்கள் அடிக்கும் பகற்கொள்ளை; காலம் முழுவதும் தன் சக்தியை உலக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த வயதானவர்களின் இறுதிக் கால சேமிப்பின் மீது தனியார் வங்கிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் – என அனைத்தும் தொடர்கின்றன. முன்பு தொழிலாளி வர்க்கம் என்ற வகையில் தாக்கப்பட்டோம்; தற்போது பணி ஓய்வு பெற்ற வயதானவர்கள் என்ற வகையில் கொள்ளையடிக்கப்படுகிறோம். வயதானவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசுகள் தங்கள் கடமையை உதறி வருகின்றன.
மத்திய அரசு 1.1.2020 முதல் 18 மாத காலத்திற்கான கிராக்கிப்படி நிலுவைத் தொகையை வழங்காமல் இன்று வரை ஊழியர்களையும் ஓய்வூதியர்களையும் வஞ்சித்து வருகிறது. மாநில அரசோ 1.1.2020 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கிராக்கிப்படியே இல்லை என்று கைவிரிக்கிறது. கிராக்கிப்படி நிலுவையையே வழங்க முன்வராத அரசுகள் எப்படி நம் மரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தப் போகின்றன.
தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மருந்துக் குப்பிகளைக் குவிப்பதும்; வளர்ச்சியடையாத பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறையை உருவாக்குவதுமான தங்கள் தத்துவார்த்த நடவடிக்கைகளைத் தொடர்கின்றன. இந்த ஏகாதிபத்திய மனோபாவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்னும் நம் குரல் ஓங்கி ஒலித்தாக வேண்டும். சோஷலிசத்திற்கு மாற்று உலகத்தில் இல்லை என்பதைத் தான் உலக நிகழ்வுகள் நிரூபித்துவருகின்றன.
வயதான அனைவருக்கும் மரியாதையான வாழ்க்கை – நியாயமான பென்ஷன் – உரிய மருத்துவ வசதி – உத்தரவாதமான இருப்பிடம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் – போன்றவற்றிற்கான நம்முடைய நியாயமான போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து வருவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது, வரும் அக்டோபர் முதல் தேதியை சென்ற ஆண்டினை விடப் பரவலாகவும், பல புதிய அமைப்புகள் நம்முடன் நின்று குரல் கொடுக்கும் பெரு நாளாகவும் அனுசரிப்போம்!
ஆர்ப்பாட்டங்கள் – பேரணிகள் – ஜனத்திரள்கள் – சுற்றறிக்கை விநியோகம் – ஆன்லைன் கூட்டங்கள் போன்ற பல்வேறு சாத்தியமான நடவடிக்கைகள் மூலம் உலக வயதானோர் நாளை அக்டோபர் முதல் நாளன்று அனுசரிப்போம். இதுவரை நம் அமைப்பு 2014-ம் ஆண்டு துவங்கிய பின்னர் 5 முறை ஆண்டு தோறும் இந்நாளை உலக ஓய்வூதியர் போராட்ட தினமாக அனுசரித்துள்ளோம். இவ்வாண்டு முந்தைய ஆண்டுகளை விஞ்சும் விதமான அனுசரிப்பை கடைப்பிடிக்கவேண்டும் என்ற உலக ஓய்வூதியர் அமைப்பின் அறைகூவலை நினைவில் கொண்டு செயல்படுவோம்.
அக்டோபர் 1 – உலக வயதானோர் போராட்ட நாளை, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களை நாம் அணுகி பரந்து பட்ட ஒற்றுமை கண்டு அனுசரிப்போம். நம் குரல் அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் வயதானோரின் போராட்டக் குரலாக உலகம் முழுவதும் எதிரொலிக்கட்டும். இப்போதிருந்தே திட்டமிடுவோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர்-1 உலக வயதானோர் போராட்ட நாள் நம் திட்டமிடுதலில் சக்தியாக ஒலிக்கட்டும்.
போராட்டங்கள் – அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் – டிஜிட்டல் பேனர்கள் – சங்கங்கள் மற்றும் நம் அமைப்புகளின் பதாகைகள், கொடிகள் – அனைத்துடன் அக்டோபர் முதல் நாள் “உலக வயதானோர் நாள் – உலக ஓய்வூதியர் நாள்” பிரம்மாண்டமாக அமையட்டும்.
“ மரியாதையான வாழ்க்கைக்கான நம் போராட்டம் தொடரட்டும்”
“கிராக்கிப்படி நிலுவையையும், முறையான கிராக்கிப்படி வழங்குவதையும் மத்திய மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்தட்டும்”
“நியாயமான பென்ஷன் – உரிய மருத்துவ வசதி – உத்தரவாதமான இருப்பிடம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் – அளிக்க அரசுகள் முன்வரட்டும்”.
0 Comments