Latest

10/recent/ticker-posts

சென்னை கூட்டுறவு சங்க நீதிமன்ற வழக்கு – முக்கிய தகவல்

  AIBDPA TN*

 சென்னை கூட்டுறவு சங்க நீதிமன்ற வழக்கு – முக்கிய  தகவல்


அன்பார்ந்த தோழர்களே,

              சென்னை கூட்டுறவு சங்கம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் AUAB சார்பில் நடைபெற்று வருகிறது.

         AIBDPA தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் சார்பிலும், AIBDPA சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் சார்பிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.

            AUAB சார்பில் நான்கு சங்கங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. AIBDPA தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நமது வழக்கும், AUAB வழக்குடன் இணைக்கப்பட்டு (Tagged) விசாரிக்கப்பட்டுள்ளது.

              தற்போது, வழக்கறிஞர்களின் இறுதிக்கட்ட வாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த மாண்புமிகு நீதிபதி கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், புதிய அமர்வு அமைக்கப்படாத காரணத்தால் கடந்த எட்டு மாதங்களாக வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

                     இதற்கிடையில், நமது தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தோழர் அஜய் கோஸ் அவர்கள் மறைவடைந்ததால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது புதிய மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

              இச்சூழலில், 15.07.2026 அன்று மாலை, AUAB சார்பில் தோழர்கள் S. செல்லப்பா (AGS), A. பாபு ராதாகிருஷ்ணன் (CVP), K. சீனிவாசன் (ACS), NFTE சார்பில் தோழர் குழந்தைநாதன் (CS) மற்றும் AIBDPA சார்பில் R. ராஜசேகர் (மாநில செயலர்), A. ஆரோக்கியநாதன் (CVP) ஆகியோர், மறைந்த தோழர் அஜய் கோஸ் அவர்களின் அலுவலகத்தில் மூத்த வழக்கறிஞர் திரு கிருஷ்ணசாமி அவர்களைச் சந்திக்கச் சென்றோம்.

            நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டு மாலை 5.30 மணியளவில், மூத்த வழக்கறிஞர் திரு கிருஷ்ணசாமி அவர்களும், வழக்கறிஞர் திருமிகு தர்ஷினி அவர்களும் எங்களைச் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

                 கடந்த எட்டு மாதங்களாக வழக்கு விசாரணைக்கு வராததால் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், கூட்டுறவு சங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய தொகைகள் கிடைக்காமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் காலமான ஊழியர்களின் வாரிசுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வருவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

        நமது தரப்பின் வாதங்களையும், பிரச்சினையின் அவசரத்தையும் முழுமையாகப் புரிந்துகொண்ட மூத்த வழக்கறிஞர் திரு கிருஷ்ணசாமி அவர்கள், வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்காக உயர்நீதிமன்ற நிர்வாக அதிகாரியிடம் (Administrator) தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, உரிய அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தார்.

            இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி விரைவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற உறுதியான நம்புகிறோம்.

            வழக்கின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து தோழர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும்.

தோழமையுடன்,
R. ராஜசேகர்
மாநில செயலர்
AIBDPA – தமிழ்நாடு
16.07.2026

Post a Comment

0 Comments