Latest

10/recent/ticker-posts

  AIBDPA TN 

 துயரச் சம்பவத்தில் தோள் கொடுத்த,  சென்னை தோழர்களின் மனிதாபிமான செயல் 🙏


தோழர்களே, 

                 கோவை அகில இந்திய மாநாடு டிசம்பர் 17, 18 தேதிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அனைவரும் அறிந்ததே. மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தோழர்களும் தங்களது மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

                  அது சமயம், 19.12.25 அன்று காலை 5.45 மணியளவில் மேற்கு வங்க மாநிலத் தோழர்கள் தங்கள் மாநிலத்திற்கு செல்லும் வழியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கல்கத்தா இரயிலுக்கு மாறி பயணம் செய்ய இருந்த சூழலில், எதிர்பாராத ஒரு துயரச் சம்பவம் நிகழ்வு நடந்து விட்டது.

              கோவை ரயிலிலிருந்து இறங்கி கொல்கத்தா ரயில் ஏறும் தருணம், பிதம் சந்திர பிராமிகா என்கின்ற தோழருக்கு (கிருஷ்னாகர் நாடியா மாவட்டச் செயலர்) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பிளாட்பாரத்தில் சரிந்து விழுந்து இருக்கிறார்.  உடன் வந்த தோழர்கள் உடனடியாக இரயில்வே காவல் துறையினரின் உதவியோடு அவரை ஸ்ட்ரெச்சரில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலுள்ள  அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.  அங்கே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

                   இது யாரும் எதிர்பாராத மிகவும் துயரமான சம்பவம். உடன் வந்த அனைவரும் ஏற்கனவே முன்பதிவு செய்த ரயிலுக்கு செல்ல வேண்டி இருந்ததால், தோழர்கள் சதன் குமார் பிஸ்வாஸ் (மாவட்ட தலைவர்), பரிசல் சர்கார் (மாநிலத் துணைச் செயலாளர்) இவர்களை இருவரது பொறுப்பில் விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுள்ளனர்.

           இந்தத் தோழர்கள் உடனடியாக அவர்களது மாநில தோழர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.  தோழர் அசிஸ் தாஸ் (மாநிலச் செயலர் AIBDPA மேற்குவங்கம்),  BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா இவர்களுக்கு தகவல் சென்றிருக்கிறது. இவர்கள் மூலமாக தகவல் தோழர் K G ஜெயராஜ்,  சென்னை தொலைபேசி BSNLEU  மாநிலச் செயலர் ஸ்ரீதர் சுப்ரமணியம் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்களுக்கு தகவல் சென்றது. தமிழ் மாநிலச் செயலர் தோழர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது. மாநில செயலர் அப்போது கோவையில் இருந்தார்.

                         நாம் உடனடியாக களத்தில் இறங்கினோம். மாநாடு நடந்து முடிந்து மற்ற தோழர்கள் அனைவரும் அப்போதுதான் பயணத்தில் இருந்து கொண்டிருந்த காரணத்தினால் தோழர் S.செல்லப்பா AGS, தோழர் ஸ்ரீதர சுப்பிரமணியன் CS முன் முயற்சியால் சென்னை தொலைபேசி தோழர்களையும் நாம் தொடர்பு கொண்டோம். உடனடியாக சென்னை தொலைபேசி BSNLEU தோழர் பிரபு கண்ணன், தோழர் தீபக்ராஜ், தோழர் விஜயரங்கன் இவர்களோடு, AIBDPA சென்னை மாவட்ட செயலாளர் தோழர் R.சிரில்ராஜ் அவர்கள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்றார்கள்.

வாரிசுதாரர்கள் இல்லாமல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடியாது என்று ரயில்வே காவல்துறை சொன்னது. நாம் DRPU மாநில தலைவர் தோழர் R. இளங்கோவன் அவர்கள் தொடர்பு கொண்டோம். அவரும் நமக்கு உடனடியாக உதவி செய்ததால், அதன் அடிப்படையில் நம்முடைய மேற்கு வங்க தோழர்கள் மற்றும் சென்னை தோழர்களின்  சாட்சியாக கொடுக்கப்பட்டு, இறந்த தோழரின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் உடல் விமானம் மூலம் எடுத்துச் செல்லவேண்டி இருப்பதனால், அதை பதப்படுத்தும் (Emforming) பணியினையும் நாம் உடனடியாக மேற்கொண்டோம். 

            அருகில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதற்கான பணிகள் நடைபெற இயலாத காரணத்தினால், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது. நாம் பணிகள் முடிந்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால் அங்கும் அது நடைபெறாமல் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கே வந்து, அடுத்த நாள் 20 டிசம்பர் ஆம் தேதி பகல் 12 மணி அளவில் அந்த பணிகள் நடந்து முடிந்தன. மாலை 6 மணிக்கு அவரது உடல் விமானத்தின் மூலமாக கொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

         சென்னையில் பிரேதத்துடன் தங்கியிருந்த அந்த இரண்டு தோழர்களையும் உடனடியாக சென்னை சென்ற மாநிலச் செயலாளர் R.ராஜசேகர் டிசம்பர் 20 காலை 8 மணியளவில் அவர் தங்கி இருக்கும் இடம் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து விட்டு வந்தார்.  பிறகு அன்று முழுவதும் இந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட சென்னை தொலைபேசி BSNLEU மாநிலச் சங்க நிர்வாகி தோழர். விஜயரங்கன் அவர்கள் உடனடியாக விமான நிலையத்திற்கு அந்த உடல் செல்லும் வரை தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து இருக்கின்றார்.  

             மற்ற இரண்டு மேற்கு வங்க தோழர்களும்  டிசம்பர் 21 அன்று காலை 6 மணி விமானத்தில் கிளம்பி 9 மணிக்கு கல்கத்தா சென்றடைந்து இருக்கின்றார்கள். இந்த முழு நிகழ்விலும் தோழர் K G ஜெயராஜ் Patron, தோழர் அஜிஸ்தாஜ் CS, தோழர் R.முரளிதரன் நாயர் GS, தோழர் R. ராஜசேகர் CS   ஆகியோர் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருந்தனர். தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

            இது மிகவும் துயரமான சம்பவம் தான் எனினும் சென்னை தொலைபேசி BSNLEU தோழர்களும், AIBDPA தோழர்களும் இந்த பணியில் தங்களுடைய தோழமையுடன் கூடிய மனிதாபிமான உதவிகளை உணர்வு பூர்வமாக செய்து முடித்திருக்கிறார்கள்.  இதில் முழுமையாக ஈடுபட்ட தோழர்கள் பிரபு கண்ணன்,  தீபக்ராஜ், கடைசி வரை உடன் இருந்த தோழர் விஜயரங்கன் இவர்களோடு, AIBDPA சென்னை மாவட்ட செயலாளர் தோழர் சிரில்ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மற்றும்  தக்க தருணத்தில் தலையிட்டு வழிகாட்டி உதவி செய்த தோழர் S.செல்லப்பா  AGS BSNLEU, தோழர் ஸ்ரீதரசுப்ரமணியம் CS BSNLEU, தோழர் R.இளங்கோவன் DRPU தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
AIBDPA TN 
22.12.25

Post a Comment

0 Comments