செவ்வணக்கம் தோழா !!
AIBDPA தமிழ்மாநிலச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், மூத்த தோழருமான தோழர். A.மீனாட்சிசுந்தரம் மறைவு –இயக்கத்திற்குப் பேரிழப்பு. !
தோழர்களே !
AIBDPA தமிழ்மாநிலச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், நாகர்கோவில் மாவட்டத்தில் சங்கத்தின் நீண்டகால மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவருமான அருமைத் தோழர் A.மீனாட்சிசுந்தரம் அவர்கள், 17.10.2026 அன்று மதியம் நம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், சங்கத்தின் மீதும் இயக்கத்தின் மீதும் கொண்டிருந்த பற்றும் ஈடுபாடும் சிறிதும் குறையவில்லை. சங்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார்.
பணியில் இருந்த காலத்திலேயே NFPTE/NFTE தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்கள், BSNL ஊழியர் சங்கத்திலும் சிறப்பாகப் பணியாற்றியவர்.
மார்க்சிய–லெனினியக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும் உரிமைப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியுடன் செயல்பட்டவர்.
நாகர்கோவில் நகரக் குழு, குமரி மாவட்டக் குழு உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
AIBDPA தமிழ்மாநிலச் சங்கத்தை உருவாக்குவதிலும், அதன் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து வழிகாட்டுவதிலும் அவரது பங்கு மகத்தானது.
அண்மையில் கோவையில் நடைபெற்ற AIBDPA அகில இந்திய மாநாட்டிலும் உடல்நலக் குறைவுக்கு இடையிலும் பங்கேற்ற அவரது இயக்கப் பற்றும் அர்ப்பணிப்பும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.
தோழர் A. மீனாட்சிசுந்தரம் அவர்களின் மறைவு AIBDPA இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது உறுதியான கொள்கைப்பற்று, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, போராட்ட உணர்வு, கம்பீரம் ஆகியவை நம் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும்.
அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதும், அவர் நேசித்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும் ஓய்வூதியர் உரிமைப் போராட்டங்களையும் வலுப்படுத்துவதுமே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அருமைத் தோழருக்கு செவ்வணக்கம்!
கனத்த இதயத்துடன் விடை கொடுக்கிறோம், தோழரே!
நீங்கள் மறைந்தாலும், உங்கள் நினைவுகளும் கொள்கைகளும் போராட்டப் பாரம்பரியமும் எங்களுடன் என்றும் வாழும் !
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
17.10.26
🔴 தோழர் A. மீனாட்சிசுந்தரத்திற்கு செவ்வணக்கம்! 🔴
தோழர் A. மீனாட்சிசுந்தரம் அவர்கள் இனி நம்மிடையே இல்லை என்பதை நம்பவே மிகவும் கடினமாக இருக்கிறது. NFPTE சங்கத்தில் தொடங்கி, ஓய்வுக்குப் பிறகு AIBDPA இயக்கத்திலும் மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் பணியாற்றிய சிறந்த தலைவர் அவர்.
AIBDPA நாகர்கோவில் மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றவர். மேலும், உதவி மாநிலச் செயலாளர் என்ற பொறுப்பையும் ஏற்று, தமிழ்நாட்டில் AIBDPA இயக்கத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
முற்போக்கு இயக்கங்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – CPI(M) கட்சியின் பகுதி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அக்கட்சியின் பகுதி குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
கன்னியாகுமரியில், குறுகிய கால உடல்நலக் குறைவுக்குப் பிறகு, 17.10.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவர் தனது இறுதி மூச்சை விட்டார்.
தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மறைவு AIBDPA இயக்கத்திற்கும், பிற முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்.
மறைந்த அந்தச் சிறந்த தலைவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையையும் இதயபூர்வமான அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செவ்வணக்கம் தோழரே!
தோழர் K. G. ஜெயராஜ்
புரவலர், AIBDPA

0 Comments