AIBDPA TN
நொய்டா தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !
அன்பார்ந்த தோழர்களே !
2026 ஏப்ரல் மாதம் நொய்டா தொழிலாளர் எழுச்சிக்காக என்றென்றும் தொழிற் சங்க இயக்க வரலாற்றால் நினைவு கூரப்படும். மூலதனத்தின் குரூரமான தாக்குதலுக்கு எதிரான அவர்களின் போராட்டம் வருமான மறு பங்கீட்டு நீதிக்காக உழைப்பாளி மக்களின் எல்லா பிரிவினர் நடத்தும் போராட்டங்களுக்கும் உற்சாகம் அளிப்பது ஆகும். அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர் உள்ளிட்ட மத்திய தர தொழிலரங்கங்களும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதும், கரம் கோர்ப்பதும் காலம் இட்டுள்ள கட்டளையாகும்.
அடித்தள உழைப்பாளி மக்கள் காண்ட்ராக்ட், பயிற்சி, ஜிக் என பல்வேறு பெயர்களில் உரிமையற்ற அத்தக் கூலிகளாக மாற்றப்படுவது மத்திய தர வேலை வாய்ப்புகள் நோக்கியும் விரிவது கண்கூடானது. காலிப் பணியிடங்களை நிரப்பிடு, நிரந்தரப் பணி நியமனங்களை மேற்கொள், காண்ட்ராக்ட் - அவுட்சோர்சிங் முறைமைக்கு முடிவு கட்டு, கால முறை ஊதியத்தை அமல்படுத்து என்ற மத்திய தர அரங்க கோரிக்கைகள் இதற்கு சம்பந்தமில்லாததா ? நவீன தாராளமய பொருளாதாரப் பாதையின் தாக்குதல்களுக்கு தொடர்பில்லாததா ?
நொய்டா தொழிலாளர்கள் மூலதனப் பூனைக்கு மணி கட்ட முனைந்ததன் விளைவே டெல்லியில் ஏற்பட்டுள்ள எழுச்சி. டெல்லி சாலைகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளுக்கு வந்தனர். இது தன்னெழுச்சியான போராட்டம் என வர்ணிக்கப்பட்டாலும், அதற்கான கனல் கருக்கொண்டு அதன் அனல் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே வெளிப்படத்துவங்கி விட்டது. பீகார் பரௌனி, பின்னர் பானிபட், சூரத், மனேசர் என பல்வேறு தொழில் மையங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. அதன் தொடர்ச்சியே நொய்டா.
"சப்கா சாத் சப்கா விகாஸ்" (எல்லோரின் பங்கேற்பு, எல்லோரின் வளர்ச்சி) என்றெல்லாம் ஒன்றிய அரசாலும், டபுள் இன்ஜின் என்று சொல்லக்கூடிய அதே கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களிலும் காது பிளக்க எழுப்பப்பட்ட முழக்கம்தான் இப்போது நெஞ்சைப் பிளக்கிற கதைகளை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லோரின் பங்கேற்பு உற்பத்தியில் இருந்தாலும், வளர்ச்சி கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என்ற அவலத்தை வெளிக் காட்டுகிறது.
தொழிற்சங்கங்கள் எல்லாம் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 26000 வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அறிவியல் பூர்வமாக வைத்து வருகின்றன. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இது ரூ 11314 ஆகவே இருந்தது. 12 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவே இல்லை. 2014க்கு முன்பாக பஞ்சப்படி உயர்வு 7 சதவீதம் ஆக இருந்தது எனில் இப்போது பஞ்சப்படி உயர்வு வெறும் 2 சதவீதமாகவே உள்ளது. இது பணவீக்கத்தால் உண்மை ஊதியம் எவ்வளவு அரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அரியானாவில் ரூ 11257 ஆகவே இருந்தது. இங்கேயும் 11 ஆண்டுகள் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவே இல்லை. இங்கே எல்லாம் மாத வாடகை மட்டும் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ 4000 செலவிட வேண்டி இருக்கிறது. இப்போது சமையல் எரிவாயு நெருக்கடி ஏற்பட்ட பின்னர் வாரத்திற்கு அதற்காக மட்டும் ரூ 500 செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எட்டு மணி நேரம் வேலை என்பதெல்லாம் இல்லை. 12 மணி நேரம் வரை கசக்கி பிழியப்படுகிறார்கள். ஓவர் டைம் என்பதும் கிடையாது. கழிப்பறை வசதிகள் கிடையாது. ஏதோ இரண்டு கழிப்பறைகளை கட்டி கணக்கு காண்பிக்கிறார்கள். பெண்களுக்கு சம கூலி கிடையாது. இவர்கள் தான் மகளிர் மசோதா பற்றி போலித்தனமாக வாய் கிழிய பேசுகிறார்கள். காண்ட்ராக்ட், பயிற்சி, ஜீப் என்கிற புதிய நாமகரணங்கள் எல்லாம் நவீன தாராளமய காலத்தின் உச்சபட்ச லாபக் குவிப்பிற்கான ஏற்பாடுகளே. சங்கம் சேரும் உரிமை மறுக்கப்படுகிறது.
இதற்கு எதிராக வெளிப்பட்ட தொழிலாளர்களின் எழுச்சி கடுமையான அடக்கு முறையால் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. வெளியே கடைகளுக்கு வந்த சாமானியர்கள் எல்லாம் தாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். டியூசன் போய்விட்டு வந்த சிறுவர் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. 350 குழந்தைகள் வரை காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு 5 நாட்கள் ஆகியும் தகவல் தரப்படவில்லை. சி.ஐ.டி.யு தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே சொல்லப்படவில்லை.
இதற்குப் பின்னர் உத்தரப் பிரதேச, அரியானா மாநில அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வுகளும் அற்ப சொற்பமானவையே. தொழிலாளர் இயக்கத்தின் கோரிக்கையான ரூ 26000 ஐ விட 40 சதவீதம் குறைவே.
புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளர்களின் நலன்களை உரிமைகளை பாதுகாக்கும் என்ற அரசின் வாக்குறுதிகள் எல்லாம் எவ்வளவு போலியானவை, வெற்றுக் கூச்சல்கள் என்பதை நொய்டா அடக்குமுறை அம்பலப்படுத்தி உள்ளது. புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் வந்த பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகள் எல்லாம் கிரிமினல் குற்றங்களாக கருதப்படும் என்ற அபாயம் அப்பட்டமாக இங்கே வெளிப்பட்டுள்ளது. உரிமைக்காக போராடுகிற அப்பாவி தொழிலாளர்களை "அர்பன் நக்நக்சல்கள் என்று அரசாங்கம் முத்திரை குத்துவதும் அவர்களை கிரிமினல்களாக நடத்துவதற்கான பிரச்சாரமே ஆகும்.
வெறுப்பு அரசியல் பேசி மக்களை மத ரீதியாக துண்டாடுகிற ஆட்சியாளர்கள் எந்த மத வேறுபாடும் இன்றி தொழிலாளர்களை தாக்குவார்கள், கார்ப்பரேட்டுகளின் உழைப்பு சுரண்டலுக்கு துணை நிற்பார்கள் என்பதை நொய்டா நிரூபித்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து உழைப்பாளி மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை, வேலை நிறுத்த உரிமைகள் எல்லாம் பாதுகாக்கப்பட இந்த விரிந்த கைகோர்ப்பு அவசியம்.
நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்துமாறு தமிழ்நாட்டின் அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இத்தகைய இயக்கங்களில் முழுமையாக பங்கேற்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
C.ஞானசேகரன்
மாநில தலைவர்
R.ராஜசேகர்
மாநில செயலர்
A.இளங்கோவன்
மாநில பொருளாளர்
26.4.26
0 Comments