Latest

10/recent/ticker-posts

இந்தியாவில் முதன்முறையாக – வரலாறு படைத்த கேரள மூத்த குடிமக்கள் பட்ஜெட் (2026–27)

  AIBDPA TN

இந்தியாவில் முதன்முறையாக – வரலாறு படைத்த கேரள மூத்த குடிமக்கள் பட்ஜெட் (2026–27)


.           2026–27 ஆண்டிற்கான இந்தியாவின் முதல் மூத்த குடிமக்கள் (Senior Citizens) பட்ஜெட்டை கேரள அரசு முன்வைத்து வரலாறு படைத்துள்ளது. 

இது “மூத்த குடிமக்கள் நட்பு கேரளம்” என்ற இலக்கை நோக்கிய ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

கேரள மக்கள் தொகையில் 18.7% (66 லட்சம் பேர்) மூத்த குடிமக்களாக உள்ளனர். 2030க்குள் இது 20% ஆக உயர்வதற்கான சமூக யதார்த்தத்தை உணர்ந்து, மாண்புமிகு தோழர் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, மூத்த குடிமக்கள் நலனுக்கு முதன்மை அளித்துள்ளது.

.         இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் நலனுக்காக மொத்தம் ₹56,236.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதம் ₹2,000 வீதம் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத்திற்கு ₹9,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 62 லட்சம் பேருக்கு சமூக நல ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

             வயோமித்ரம் திட்டத்திற்கு ₹27.50 கோடி, ஓய்வூதிய இல்லங்கள் அமைப்பதற்கு ₹30 கோடி, மூத்த குடிமக்கள் உதவி தன்னார்வலர்களுக்கு ₹10 கோடி, படுக்கையிலுள்ள நோயாளிகளை பராமரிப்போருக்கான உதவி ₹600-இலிருந்து ₹1,000 ஆக உயர்த்தி ₹100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

              மூத்த குடிமக்கள் சுகாதார பாதுகாப்பிற்காக நியூமோகாக்கல் தடுப்பூசி – ₹50 கோடி, மனநல சேவைகள், மற்றும் கருண்ய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது.

               உள்ளாட்சி அமைப்புகளின் பட்ஜெட்டில் 5% (₹3,316 கோடி) மூத்த குடிமக்கள் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் பகல் நேர பராமரிப்பு மையங்கள், மூத்த குடிமக்கள் நட்பு உட்காரும் இடங்கள், ரேம்புகள், லிப்ட்கள், கழிப்பறைகள், கைப்பிடிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.

            இந்த பட்ஜெட் செயலில் மூப்புநிலை (Active Ageing) என்ற கருத்தை முன்வைத்து, மூத்த குடிமக்கள் அயல்குழுக்கள், கிளப்புகள், சுயதொழில், தொடர்கல்வி, டிஜிட்டல் எழுத்தறிவு, ‘உணர்வு’ போன்ற பண்பாட்டு திட்டங்கள் தொடரவும், மேம்படுத்தவும் உறுதி செய்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட மூத்த குடிமக்கள் ஆணையம் இந்த நல நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்.

மத்திய பட்ஜெட் – மூத்த குடிமக்களுக்கு ஒரு புறக்கணிப்பு

          இதற்கு முற்றிலும் மாறாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

SCFWA உள்ளிட்ட மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஓய்வூதிய உயர்வு, ரயில் கட்டண சலுகை மீட்பு, மத்திய மூத்த குடிமக்கள் ஆணையம் அமைத்தல் போன்ற எந்தக் கோரிக்கையும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 

இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தேச வளர்ச்சியில் தீர்மானகரமான பங்காற்றிய மூத்த குடிமக்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கோருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பட்ஜெட்டில் உடனடி திருத்தங்கள் செய்ய வேண்டும்.


கேரள அரசுக்கு வாழ்த்துக்கள் !!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மனிதநேயமான, முன்னோக்கிய மூத்த குடிமக்கள் பட்ஜெட்டிற்காக,

தோழர் பினராயா விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி ஜனநாயக அரசுக்கு,

சீனியர் சிட்டிசன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் (SCFWA) தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

வி. ஏ. என். நம்பூதிரி
தலைவர், SCFWA
ஆலோசகர் 
AIBDPA/ NCCPA 

02.02.2026

Post a Comment

0 Comments